ஆலயம்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.

 

தினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 5.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார்  (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

அன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.

 

அன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது!